வேலைத்திட்டக் கூட்டம். குடி அரசு - தலையங்கம் - 25.121932 

Rate this item
(0 votes)

இந்த மாதம் 28, 29 தேதி புதன், வியாழக் கிழமைகளில், ஈரோட்டில், சுயமரியாதை இயக்கத்தின் 1933 வருஷத்திய வேலைத் திட்டத்தைப் பற்றி யோசிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக சுய மரியாதை இயக்கத்து பிரமுகர்களும், தீவிர பிரசாரர்களும் அபிமானிகளும் ஆதரவளிப்பவர்களுமான தோழர் பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. சில முக்கிய பிரபலஸ்தர்களுக்கு அழைப்பு வந்து சேராமலோ, அல்லது அனுப்பத் தவறிப்போயோ இருந்தாலும் இருக்கலாம். அவற்றை யெல்லாம் வட்சியம் செய்யாமல் இயக்க அபிமானிகள் உள்படயாவரும் விஜயம் செய்து ஒரு வேலைத் திட்டம் நிர்ணயிக்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இதுவரை சுயமரியாதை இயக்கம் பெரிதும் பிரசார நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது என்றாலும் அது தோன்றியது முதல் நாளுக்கு நாள் முற்போக்கான, கொள்கைகளையே படிப்படியாய் கைக் கொண்டு பிரசாரம் செய்து வந்திருப்பதின் மூலம் பெரிதும் தமிழ் நாட்டு மக்களின் உள்ளத்தில் ஒரு பெரிய புரட்சி உணர்ச்சியை உண்டாக்கி இருப்பதுடன் குறுகிய நோக்கமும் சுயநல பிரதானமும் கொண்டவர்கள் உள்ளத்தில் பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கி வந்திருக்கிறது. 

தீவிர முற்போக்குகள் ஏற்படுகின்ற எந்த தேசத்திலும். எந்த காலத்திலும் சுயநல மக்களுக்கு இவ்வித அச்சமும் ஆத்திரமும் தோன்றி, சிறிது காலம் புத்திதடுமாறி தாறுமாராய் திரிந்து விட்டு கடைசியாய் உள் நுழைந்து கொள்வது இயல்பேயாகும். ஆனால் உண்மையான கவலையோடு மக்களின் முற்போக்கிற்கு உழைக்கின்றவர்கள் இவற்றை லட்சியம் செய்யாமல் புது புது கொள்கைகளுடன் மேலே மேலே போய்க் கொண்டிருப்பார்களேயானால் பழய கொள்கைகள் என்பவை எதிரிகளால் சகிக்கக் கூடியதாகவும் சாதாரண மானதாகவும் கருதக் கூடியதாகி, புதுக் கொள்கைகளோடு மாத்திரம் போரிடு பவர்களாக ஆகிவிடுவார்கள். அப்படிக்கில்லாவிட்டால் குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியே விவகாரம் நடத்திக் கொண்டிருக்க நேரிட்டு முயற்சிகளுக்கு முன்னேற்ற மென்பதில்லாமல் தேக்கம் உண்டாய் விடும். ஒரு விஷயத்தைப் பற்றி சரியோ, தப்போ என்பதை கவனிக்காமல், எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாய் வம்பளந்து வயிறு வளர்ப்பதையே வாழ்க்கையாய் கொண்ட மக்கள் உலகம் எங்கும் இருந்து தான் வருகின்றார் கள், இவர்களுடைய உதவி யாருக்கும் எவ்வளவு குறைந்த விலைக்கும் கிடைக்கக் கூடும். 

ஆதலால் முற்போக்கால் புதுக் கொள்கைகளால் சுயநல பங்கமடையக் கூடிய மக்கள் இக்கூட்டத்தின் உதவியால் ஒரு சாதாரண விஷயத்திற் கெல்லாம் ஆகாயம் இடிந்து விழப்போவதை தடுக்க வேண்டியவர்கள் போல் மாய்மாலக் கூப்பாடு போட்டு அங்குமிங்கும் திரிந்து பாமர மக்களை ஏமாற்றி ஆதரவு தேட அலைவார்கள். 

நிற்க, மக்கள் நலத்தில் கவலைக் கொண்டு பொது காரியத்தில் முனைந் திருப்பவர்கள் சிறிதாவது ஏதாவதொரு காரியத்தைச் செய்து சாதிக்க வேண்டும் என்று கருதுவார்களேயானால் அவர்களுக்கு முக்கியமான ஒரு யோக்கியதை இருக்க வேண்டும். அதென்னவென்றால் இப்படிப்பட்ட போலிக் கூப்பாடுகளுக்கும், கூலி மாரடிப்புகளுக்கும் மனம் கலங்காமல் இருக்க வேண்டியதே யாகும். மற்றும் நமது கொள்கையைப் பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள் நம்மைப் பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்” என்கின்ற விஷயத்தைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவனியாமல் யாவர் அலட்சிய மாய் இருக்கிறார்களோ அவர்களேதான். அவ்வளவுக்கவ்வளவு புதிய எண்ணங்களையும், புதிய உணர்ச்சிகளையும், புதிய கொள்கைகளையும், மக்களுக்குள் புகுத்தவும், அதை காரிய அனுபவத்தில் கொண்டு செலுத்தச் செய்யவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

உதாரணமாக நிர்வாணக் கொள்கையை ஒரு நாட்டில் வெற்றி பெற நடத்த வேண்டும் என்று ஒருவன் கருதுவானேயானால் அவன் அக்கொள்கை யின் அவசியத்தையும், சரியா தப்பா என்பதையும் கவனிக்க வேண்டுமே யொழிய மற்றபடி இக்கொள்கையை எடுத்து சொன்னால் மக்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைப்பானே யாகில் அக் கொள்கைக்காரன் அந்த வேலைக்கு தகுதி அற்றவனே ஆவான். நிர்வாணக் கொள்கையை பிரசாரம் செய்ய ஆரம்பித்தால் பஞ்சாலை துணியாலை வியாபாரிகள் எல்லோரும் எதிர் பிரசாரத்திற்கு வந்து விடுவார்கள். ஜவுளி வியாபாரிகள், ஆக்கர்கள் எல்லோரும் விஷமப் பிரசாரத்திற்கு வருவார்கள். இவர்கள் வார்த்தைகளைக் கேட்ட சாதாரண பாமரமக்கள் எல்லோரும் நிர்வாணப் பிரசாரர்கள் மீது கல்லெடுத்துப் போடவும் வருவார்கள். இவற்றை சமாளிக்கவோ அல்லது அதன் பயனை அடையவோ தயாராயிருப்பவர்கள் தான் இந்தப் பிரசாரத்தில் புகவேண்டும். இவர்கள் தான் வெற்றி பெறக் கூடும். அப்படிக்கில்லாமல் *நமது உருவப்படம் மூடர் வீட்டில் பூஜையில் இருக்க வேண்டும்" என்று கருதுகின்றவர்கள் இவ்வேலைகளைச் செய்யச் சிறிதும் தகுதியற்றவர்களே யாவார்கள். ஆதலால் தனக்குள் உறுதியும் அதனால் ஏற்படும் பலனை அனுபவிக்க துணிவும் உள்ளவர்களால் தான் பயன்படத்தக்க மாறுதல்களை உண்டாக்க முடியுமென்றும், அப்படிப் பட்டவர்களால்தான் உலகில் தலை கீழான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் எடுத்துக் காட்டுவதற் காகவே இதைக் குறிப்பிட்டோம். 

நிற்க, 1933லுத்துக்கு என்று நாம் வகுக்கப்போகும் திட்டங்களில் பல பொது ஜனங்கள் என்பவர்களும் அரசாங்கத்தார் என்பவர்களும், குற்றங் கூறக் கூடியதாகவும், குற்றமாய் கருதக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனா லும் அவ்வியக்கத்தில் அத்திட்டங்களில் நம்பிக்கையும் பற்றும் கொண்டவர் களும். முதலாவதாக இத்திட்டங்களை வெளியிட்டால் ஜனங்கள் என்ன சொல்லுவார்கள். அரசாங்கத்தார் என்ன சொல்லுவார்கள் என்பதை மறந்து, இது சரியா, தப்பா, அவசியமா,அவசியமில்லையா என்பதைத்தான் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். பொது ஜன அபிப்பிராயம் என்பதை எப்படி லட்சியம் செய்யக் கூடாது என்று சொல்லுகின்றோமே அப்படித்தான் சர்க்கார் அரசாங்கத்தார்) என்ன சொல்லுவார்கள் - என்ன செய்வார்கள் என்பதையும் லட்சியம் செய்யக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம். பொது ஜனங்களோ பாமரர்கள் - மூடநம்பிக்கையில் பற்று கொண்டவர்கள் பகுத்தறிவு தடை படுத்தப்பட்டவர்கள், சர்க்கார், என்பதோ சுயநலமே உருவாய் கொண்ட முதலாளித்தன்மையும் எஜமானத் தன்மையும் கொண்டது. அதாவது இந்த இரண்டுப் பிரிவும் முதலாளி (செல்வவான்கள்) களாலும், சோம்பேரி பார்ப்பனர்கள் களாலும் நடத்தப் படுவனவாகும். மேற்கண்ட செல்வமும், பார்ப்பனியமும் மதம், அரசாங்கம் என்னும் சாதனங்களாலேயே காக்கப்படுவதாகும். ஆகவே ஒன்றுக் கொன்று சுலபத்தில் பிரிக்க முடியாத சம்மந்தமும் ஆதரவும் கொண்டவைகள். எனவே பொது ஜனங்களானாலும், சர்க்காரானாலும் செல்வவான்களுக்கும் சோம்பேரிகளுக்கும் விபரீதத்தை விளைவிக்கக் கூடிய எந்தக் கொள்கை களையும் எதிர்த்தே தீருவார்கள். ஆதலால் இவ்விரண்டு வகை எதிர்ப்புக்கும் தயாராயிருந்து தான் நாம் நமது திட்டங்களை வகுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். தீவிரமான, அவசியமான வேலைத் திட்டம் வகுக்க கருதும் தோழர்கள் இந்த இரண்டு எதிர்ப்பையும் சமாளிக்க உறுதி கொண்டு வந்தால் தான் சரியான திட்டங்களை வகுக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம் 

இப்பொழுது இரண்டுவகை திட்டங்கள் யோசனைக்கு கொண்டு வருவதற்காக சில தோழர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஒன்று சுயமரியாதை சமதர்மக் கட்சித் திட்டம் என்னும் பேராலும், மற்றொன்று சுயமரியாதை கட்சி இதுவரையில் செய்து வந்தது போலவே பிரசாரத்தின் மூலமாக பல துறையிலும் சீர்திருத்தங்கள் செய்து மக்களுக்கு உலக ஒற்றுமை யையும் பகுத்தறிவையும், அன்பையும் உண்டாக்குவது என்பது இரண்டைப் பற்றியும் சுருக்கமாக விளக்க வேண்டுமானால் முன்னையது சில கொள்கை களை வகுத்து அதை நிறைவேற்ற சட்டசபை முதலிய அரசியல் பொதுஸ்தாபனங்களைக் கைப்பற்றி அதன் மூலம் நடத்துவிப்பது என்பது. பின்னை யது அரசியல் ஸ்தாபனங்களை லட்சியம் செய்யாமல் மக்களிடை பல கொள்கைகளைப் பிரசாரம் செய்து கொண்டே உலகப் புரட்சியை எதிர் நோக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது மற்றொன்று. இந்த இரண்டு வித வேலையும் தனித்தனியே நடத்தப்படலாம் என்பது. ஆகவே இந்த விஷயங் கள் எல்லாம் நன்றாய் பொறுப்புடன் ஆலோசிக்கப்படப்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகும். 

ஆதலால் உண்மை விடுதலையிலும், உண்மை சமத்துவத்திலும் பற்று கொண்ட சுயமரியாதைத் தோழர்கள் அவசியம் விஜயம் செய்து கூட்டத்தின் உத்தேசத்தை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 

குடி அரசு - தலையங்கம் - 25.121932

Read 43 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.